அமைச்சர்கள் பதவி விலகி வழக்கை சந்திக்க வேண்டும்: விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்தபோது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததை உறுதி செய்யப்பட்டதன் விளைவாக இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டது.

இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டு பல நாட்கள் ஆகியும் தீர்வு வராத நிலையில், நேற்று தேர்தல் ஆணையம், பணப்பட்டுவாடா நடைபெற்றது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், வேட்பாளர் டி.டி. வி.தினகரன் மற்றும் நான்கு தமிழக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது வரவேற்கத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருக்கின்ற நிலையில், இது போன்ற குற்றச்சாட்டு முதல்-அமைச்சர் பேரிலும், ஆளும்கட்சி அமைச்சர்கள் பேரிலும் வந்ததனால், இதை கருத்தில் கொண்டு, தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

அமைச்சர்கள் பதவி விலகி, வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். குற்றமற்றவர் என நிரூபிக்க தவறினால் அவர்கள் ஆட்சி செய்ய தகுதியில்லாதவர்களாக கருதப்படுவார்கள்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று இவர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையும் ஆய்வு செய்ய வேண்டும். எனவே அ.தி.மு.க. அரசு இதற்கான விளக்கத்தை உடனடியாக கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில், இனிவரும் காலங்களில் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தே.மு.தி.க. வரவேற்கிறது.

இனிவரும் தேர்தல் காலங்களில் பணப்பட்டுவாடா என்பது இல்லாமல், நேர்மையான தேர்தலாக நடக்க, இந்த உத்தரவு நிச்சயமாக பயனளிக்கும். எனவே இதை வரவேற்கிறோம்.

ஆளும்கட்சியினர் இந்த வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.