அ.தி.மு.க. (அம்மா) கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சென்னை பெசன்ட்நகர் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்து உள்ளதே? அவருக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா?
பதில்:- ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது? என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தான் முடிவு செய்வார். அவரது முடிவு தான் இயக்கத்தின், தொண்டர்களின் முடிவு ஆகும்.
கேள்வி:- உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருவதாக கூறப்படுகிறதே?
பதில்:- யாரும் போர்க்கொடி தூக்கவில்லை. நான் கட்சியின் துணை பொதுச்செயலாளராக செயல்பட வேண்டும், கட்சி நல்லமுறையில் செயல்பட வேண்டும், நல்ல ஆட்சி தமிழகத்தில் நடக்கவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். தமிழகம் முழுவதும் என்னை அழைத்துச்செல்ல வேண்டும், கட்சி பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
கேள்வி:- அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் நடக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்பீர்களா? உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதா?
பதில்:- எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பங்கேற்பேன்.
கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பேரம்பேசப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் கவர்னரிடம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்துள்ளாரே?
பதில்:- எங்களை பொறுத்தவரை மடியில் கனம் இல்லை. எனவே வழியில் பயமும் இல்லை. நாங்கள் யாருக்கும் பயப்படவும் இல்லை. சட்டரீதியாக எல்லாவற்றையும் சந்திக்க தயாராகவே உள்ளோம்.
கேள்வி:- தனது பேச்சுவார்த்தை குழுவை ஓ.பன்னீர்செல்வம் கலைத்து விட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் வருவார், வரவேண்டும் என்று சசிகலாவை விட அதிக அதிகாரம் படைத்த நிதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான இணைப்புக்குழு வானத்தை நோக்கி காத்திருக்கிறார்கள்.
கேள்வி:- உங்களை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டதாக கூறப்பட்டு வருகிறதே?
பதில்:- என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு. வேண்டும் என்றால் நான் தான் பிறரை கட்சியில் இருந்து நீக்க முடியும். அது தான் உண்மை.
கேள்வி:- எப்போது கட்சி அலுவலகம் செல்வீர்கள்?
பதில்:- காலம் வரும்போது நிச்சயம் கட்சி அலுவலகம் வருவேன்.
மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.