லாலு பிரசாத் மகன், மகளின் பினாமி சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி

மத்திய ரெயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்த போது, ஏராளமான நிலங்கள் மற்றும் வீடுகளை போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் பினாமி சொத்துகளாக வாங்கிக் குவித்ததாக அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் மகள் மிசா பாரதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் டெல்லியில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை பினாமி பெயரில் வாங்கிய விவகாரமும் அடங்கும்.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், வருமானத்துக்கு  அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வருமான வரித்துறையினரும் தனியே வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தேஜஸ்வி யாதவ் மற்றும் மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ்குமாருக்கும் வருமான வரித்துறை கடந்த ஜூன் 6ம் தேதி சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இந்த சம்மன்களை புறக்கணித்து விட்டனர்.

இந்நிலையில் லாலுவின் மகன் தேஜஸ்வி, மகள் மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ்குமார் ஆகியோர் பினாமி பெயரில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் டெல்லியில் ஒரு வீட்டையும், வீட்டு மனையையும் வருமான வரித்துறையினர் நேற்று முடக்கினர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக மிசா பாரதியின் ஆடிட்டர் ராகேஷ் அகர்வால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.