‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. ஆனால் இறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
* இந்த ஆட்டத்தில் இந்திய அணி ‘எக்ஸ்டிரா’ வகையில் 25 ரன்களை வாரி வழங்கியது. இதில் 13 வைடு, 3 நோ-பாலும் அடங்கும். மூன்று ‘நோ-பால்’களையும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். இதுவும் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அரைஇறுதியில் இந்தியாவுக்கு எதிராக வங்காளதேச அணி ஒரு ‘எக்ஸ்டிரா’ கூட போடவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
* இந்த அணி தனது முதல் லீக்கில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி முழுமையாக கோலோச்சியது. அதே போல் தற்போது இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியதோடு, 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பழிதீர்த்து இருக்கிறது.
* சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது. ஐ.சி.சி. இறுதிப்போட்டி ஒன்றில் ஒரு அணியின் மோசமான தோல்வி இது தான். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 123 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மோசமாக இருந்தது