ரம்யா கிருஷ்ணன் பாணியில் மிரட்ட வரும் சிம்ரன்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி – டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார்.

இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை கடந்த வாரம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது. ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படத்தை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தில் சிம்ரன், நெப்போலியனின் கதாபாத்திரங்கள் என்னவென்பது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியன் நடிப்பதாகவும், சிம்ரன் இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக `படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன், `சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா, `சிநேகிதியே’ படத்தில் தபு, `திமிரு’ படத்தில் ஷ்ரியா ரெட்டி, `கொடி’ படத்தில் த்ரிஷா, `அதே கண்கள்’ படத்தில் ஷிவாடா நாயர் வில்லியாக நடித்திருந்தனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரன் வில்லியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.