ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டாம், ஏழை மக்களுக்கு நல்லது செய்தால் போதும்: ராதாரவி பேச்சு

பல்லடம் ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா பொதுக்கூட்டம் பல்லடம் கரடிவாவியில் நடைபெற்றது.

கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மொழியின் வரலாறு தெரிந்தால் தான் கலாச்சார பண்பாட்டை காப்பாற்ற முடியும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதியை தான் சேரும்.

தமிழகத்தில் தற்போதே நிறைய அரசியல் கட்சிகள் உள்ளன. இந்த நிலையில் புதிய கட்சி ஆரம்பிப்பவர்களின் கட்சி கொடிக்கு கலர் கிடைக்காத நிலை உள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமானால் ரஜினி தன்னிடம் இருக்கும் செல்வத்தை கொண்டு ஏழை மக்களுக்கு நல்லது செய்தால் போதும்.

அவர் புதியதாக அரசியல் கட்சி தொடங்கக் கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள் ஆகும்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பல்வேறு அணிகளாக சிதறிப் போய்விட்டது. அதனால் அவர்களை பற்றி இனி கவலை இல்லை. உள்ளாட்சி, சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு எப்போது தேர்தல் வைத்தாலும் திமுக தான் மகத்தான வெற்றியை பெறும். அப்போது தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார்.

இவ்வாறு நடிகர் ராதாரவி பேசினார்.