ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கவில்லை : விஜயதாச ராஜபக்ச

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு தாம் அடைக்கலம் வழங்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (20) இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாக சிலர் என் மீது குற்றம் சுமத்தியமை வருத்தமளிக்கின்றது.

கடந்த சில தினங்களில் சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிரிவிணையை ஏற்படுத்த சில தரப்பினர் மேற்கொண்டு வந்த முயற்சிகள் குறித்து கவலையடைகின்றேன்.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது மோதல்களை தவிர்க்க நானும் அர்ப்பணிப்புடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்புடன் செயற்பட்டிருக்கின்றேன்.

எனினும் நான் சில வாரங்கள் நாட்டில் இல்லாத போது ஞானசார தேரருக்கு நான் அடைக்கலம் வழங்கியிருந்தேன் என சில முஸ்லிம் கடும்போக்காளர்கள் ஊடக சந்திப்புக்களை நடத்தி குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறு குற்றம் சுமத்தியமை குறித்து வேதனைப்படுகின்றேன். நீதி அமைச்சர் என்ற பதவியை பயன்படுத்தி அதனை துஸ்பிரயோகம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.

எனினும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே மிகவும் மோசமான முறையில் கடுமையான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த காலப் பகுதியில் அலுத்கம தர்கா நகர் போன்ற சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமையாற்றியிருந்தார்.

குறித்த காலப் பகுதியிலும் ஞானசார தேரர் கைது செய்யப்படவில்லை, ஞானசார தேரரை அமைச்சர் ஹக்கீம் காப்பாற்றினார் என கேள்வி எழுப்ப முடியுமா? நாட்டில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்யும் பொறுப்பு நீதி அமைச்சருக்கு அன்றி பொலிஸாருக்கே உண்டு.

இதேவேளை, இதுவரையில் இன மத முரண்பாடுகளை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.