பௌத்தர்களையும், பிக்குமாரையும் சீண்டத்தொடங்கியிருப்பதானது மிகவிரைவில் சீர் செய்ய முடியாத மாபெரும் பேரழிவு ஒன்றுக்கு நாட்டை தள்ளிவிடக் கூடும் என்று அஸ்கிரிய பீடம் எச்சரித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அஸ்கிரிய மகாநாயக்க பீடத்தின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கண்டியில் நடைபெற்றது.
இதன் போது அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரின் பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
ஞானசார தேரரின் போக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றபோதிலும் அவர் வெளியிடும் கருத்துக்களில் உண்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பௌத்தத்துக்கும், பௌத்த சின்னங்களுக்கும் , பௌத்த கலாச்சாரத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிக்குமார்களுக்கும் நெருக்கடி ஏற்படுத்தப்படுகின்றது.
இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் மிக விரைவில் ஒரு பெரும் பேரழிவு அவலம் ஏற்பட்டு, மீளச் சீர் செய்ய முடியாத துரதிருஷ்ட நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
எனவே இதனைப் புரிந்து கொண்டு சிங்கள மக்களின் பெருந்தன்மையை உணர்ந்து ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் செயற்பாடுகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது நன்று எனவும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் ஊடகங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.