இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகல்

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. கடந்த வருடம் இவர் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றபின், இந்திய அணி வெற்றிமேல் வெற்றிகளை ருசித்தது. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காள தேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியை தவிர, இவரது பதவிக் காலத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது இல்லை.

இவரது பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைவதாக இருந்தது. இதனைத்தொடர்ந்து மேலும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக செய்தி வெளியானது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அது வெளிப்பட்டது. பிசிசிஐ அதிகாரிகள் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே அனில் கும்ப்ளேவை வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை நீடிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

இதற்கு அனில் கும்ப்ளே சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் செல்லும்போது அனில் கும்ப்ளே ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் செல்வதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அனில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ஒருவருட கால தலைமை பயிற்சியாளர் பதவிக்கான காலம் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.