நீங்கள் தெண்டுல்கரை நேசிக்காவிடில், கிரிக்கெட் விரும்பியாக இருக்க முடியாது: ஹர்திக் பாண்டியா

லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது.

இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மளமளவென அவுட்டாகிய போதிலும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மட்டும் நம்பிக்கையுடன் விளையாடி, 33 பந்தில் அரைசதம் அடித்து, 43 பந்தில் 76 ரன்கள் எடுத்து துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

இக்கட்டான நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுடன் 265 ரன்களும், 19 டி20 கிரிக்கெட்டில் 15 விக்கெட்டுக்களுடன் 100 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்திய அணியின் நம்பிக்கை வீரராக மாறி வரும் ஹர்திக் பாண்டியா, நீங்கள் சச்சின் தெண்டுல்கரை நேசிக்காவிடில், உங்களால் கிரிக்கெட்டை விரும்ப முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘நீங்கள் கிரிக்கெட் விரும்பினால், உங்களால் சச்சினை நேசிக்க முடியாமல் இருக்க முடியாது. அப்படி இல்லையெனில் உங்களால் கிரிக்கெட்டை விரும்ப இயலாது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன்முறையாக வீரர்களுடன் ஒன்றிணையும்போது நான் சொர்க்கத்தில் இருந்ததாக உணர்ந்தேன். நான் தட்டில் உணவு வைத்து மிகவும் பிஸியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென எனது தோள்பட்டையில் ஒருவர் கை வைத்தார். நான் உடனே திரும்பிப் பார்த்தேன். அது சச்சின் தெண்டுல்கர். அவர் என்னைப் பார்த்து ஹாய் என்றார். எனக்கு உடனே பதற்றம் ஏற்பட்டது. என்னுடைய தட்டை உடனடியாக கிழே போட்டேன்.

பின்னர், உன்னுடைய ஆட்டத்திறனை இப்படியே கொண்டு சென்றால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்திய அணியில் இடம்பிடிப்பாய் என்று சச்சின் என்னிடம் கூறினார். இது எனக்கு அதிர்ஷ்டமாக இருந்தது. அடுத்த ஐந்தாவது மாதத்தில் இந்திய அணியில் இடம்பிடித்தேன்’’ என்றார்.