ராம்நாத் கோவிந்தை விட பெரிய தலித் தலைவர்கள் இருக்கிறார்கள்… மம்தா பானர்ஜி பொளேர்!!

ராம்நாத் கோவிந்த் பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், ராம்நாத் கோவிந்தைவிட பெரிய தலித் தலைவர்கள் நாட்டில் உள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, ” ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியற்றவர் என்று நான் கூற வரவில்லை. ஒருவரை ஆதரிக்க வேண்டுமெனில் அவரை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

நாட்டுக்கு பயனுள்ளவராக அவர் இருக்க வேண்டும். நான் வேறு சில எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் பேசினேன். அவர்களுக்கும் ராம்நாத் கோவிந்த் பெயர் ஆச்சரியமளித்துள்ளது.

நாட்டில் வேறு சிறந்த தலித் தலைவர்கள் உள்ளனர். பாஜகவின் தலித் மோர்ச்சா தலைவர் இவர் என்பதற்காக இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. பிரணாப் முகர்ஜி, சுஷ்மா ஸ்வராஜ், அத்வானி போன்ற ஆளுமை மிக்கவர்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார் மம்தா.