பா.ஜனதா கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு பெருகி வருவதால், அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 28-ந் தேதி முடிவடைகிறது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா முயற்சி மேற்கொண்டது. திடீரென, பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். அவரை ஆதரிக்க முடியாது என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் நாளை (வியாழக்கிழமை) கூடி ஆலோசனை நடத்துகின்றன. எனவே, எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே, பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு பா.ஜனதா கூட்டணியில் இடம்பெறாத பிஜு ஜனதாதளம், அ.தி.மு.க.வின் ஒரு பிரிவு, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவான ஓட்டு பலம் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டசபை உறுப்பினர்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை உறுப்பினர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவர்.
எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு தலா 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பை பொறுத்தவரை, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில் வேறுபடும். எனவே, எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும். இவற்றில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ஓட்டு மதிப்பை பெறுபவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற குறைந்தபட்சம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 ஓட்டு மதிப்பு வேண்டும். சிவசேனாவையும் சேர்த்து, பா.ஜனதா கூட்டணியின் ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 37 ஆயிரத்து 683. ஒருவேளை, சிவசேனா ஆதரவு அளிக்காவிட்டால், கூட்டணியின் ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 790 ஆக குறைந்து விடும்.
இருப்பினும், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால், பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவான ஓட்டு மதிப்பு 8 லட்சத்து 83 ஆயிரத்து 578 ஆக உயரும். இது, 50 சதவீத ஓட்டுகளை விட மிக அதிகம் ஆகும்.
எனவே, பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.