தோ‌ஷம் போக்கும் கரிவரதராஜ பெருமாள்

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

இந்த திருத்தலத்தில் ஜாதக ரீதியாக தோஷம் கொண்டவர்களின் தோஷம் நீங்குவதற்காக தத்து பரிகாரம் என்ற பூஜையை பக்தர்கள் செய்து வருகின்றனர். அவரவர் வசதிக்கேற்ப பச்சை பயறும், உருண்டை வெல்லமும் கொண்டு வந்து பெருமாளுக்கு படைத்து, பின்னர் அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி தங்கள் தோஷங்களில் இருந்து விடுபடுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8 முதல் 9 மணியளவில் சுக்ர ஓரையில் சந்தான பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும், மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அப்போது சாமிக்கு நெய்தீபம் ஏற்றி, தாமரை பூக்களால் அர்ச்சனை நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபாடு நடக்கிறது.

இந்த திருத்தலத்தில் புதிதாக மேற்கொள்ளும் காரிய சித்திக்கு பூ வைத்து பெருமாளின் அனுக்கிரகம் கிடைக்கிறதா? என்று பக்தர்கள் பார்க்கின்றனர். இதற்காக பக்தர்கள் தாங்கள் விரும்பும் நற்காரியத்தை மனதில் நினைத்து கொண்டு வெள்ளை அரளி பூவையும், சிவப்பு அரளி பூவையும் ஒரு தாளில் மடித்து கட்டி அதை மூலவர் வீற்றிருக்கும் கருவறையில் வைத்து பூஜை செய்கின்றனர்.

அதன்பிறகு சிறிது நேரம் கழித்து கருவறையில் வைத்த தாளில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து பிரித்து பார்க்கும் போது அதில் வெள்ளை அரளி பூ இருந்தால் நாம் மேற்கொள்ளும் காரியம் கை கூடும் என்பதும், சிவப்பு அரளி பூ வந்தால் தற்சமயத்துக்கு அந்த காரியம் மேற்கொள்ள வேண்டாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வையில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் இந்த திருத்தலம் அமைந்து உள்ளது. பெரிய நாயக்கன்பாளையத்தில் இருந்து நடந்தே கோவிலுக்கு செல்லலாம். கோவையில் இருந்து பெரியநாயக்கன் பாளையத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.