`அவதார்’ படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பிரபலம்

கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வசூலைக் குவித்த ‘அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்குவதற்கான பணிகளில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இறங்கியிருக்கிறார்.

வருகிற டிசம்பர் 2020-ல் அவதார் படத்தின் அடுத்த பாகமாக ‘அவதார் 2’ வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், படத்தை ரிலீஸ் செய்வதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

`அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார்’ உலகம்) தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படுகின்றன. அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே அவதார் படத்தில் சாம் வொர்த்திங்டன், ஃஜோ சால்டனா, ஜோயல் டேவிட் மூர், சிகோர்னி வேவர், சிசிஎச் பவுண்டர், ஸ்டீபன் லாங் என பலரும் இருக்கும் நிலையில், சமீபத்தில் `ஃபியர் தி வாக்கிங் டெட்’ படத்தில் நடித்த பிரபலம் கிளிஃப் கர்ட்டிஸ்-ம் அவதார் படக்குழுவில் இணைந்திருந்தார். கர்ட்டிஸ், டோனாவோரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மெட்கயினா இனத்தின் தலைவரும் இவர் தான் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியஸில் நடித்திருந்த ஹாலிவுட் பிரபலம் ஊனா சாப்ளின் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2.8 பில்லியன் டாலர்களை வசூலித்த அவதார், பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்திருந்தது. `டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையும் ‘அவதார்’ முறியடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவதார் 2 மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.