தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்தளவுக்கு படங்களில் நேர்த்தியை கையாள்பவர் பாலா. அவரது இயக்கத்தில் ஒருமுறை நடித்தால் போதும் என்று நடிகர், நடிகர்கள் காத்திருக்கின்றனர்.
பாலா தற்போது, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகாவை வைத்து ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ராக்லைன் வெங்கடேஷும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் இயோன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை செப்டம்பர் 29-ஆம் தேதி சரஸ்வதி விடுமுறை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநாளில் தான் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள `வேலைக்காரன்’ படமும் ரிலீசாகிறது. ‘நாச்சியார்’ படமும் அதே நாளில் ரிலீசானால் இரு படங்களுக்கும் நல்ல போட்டி நிலவும் என்பதில் சந்தேமில்லை.