உங்களின் கோபத்தை தூண்டும் உணவுப்பொருட்கள்

அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும்.

எனவே ஏற்கனவே உங்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருமாயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மட்டும் தயவு செய்து சாப்பிடாதீர்கள். சரி, இப்போது உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரவழைக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

* காரமான உணவுகளை மன அழுத்தத்தில் இருக்கும் போது உட்கொண்டால், அதனால் இரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சலை உணரக்கூடும். மேலும் காரமான உணவுகள், உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால், அது உங்கள் பரபரப்புடன் இருக்கச் செய்யும்.

* கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், அதிகளவு ட்ரான்ஸ் கொழுப்புக்களை உட்கொண்டால், அதிகளவு கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலை சீராக வைத்துக் கொள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்களை மெட்டபாலிசம் செய்யும் போது இடையூறை ஏற்படுத்தும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

* காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுவோருக்கு, அதிலும் தூங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பருகினால், தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கும். எனவே எப்போதும் காபி குடிப்பதாக இருந்தால், படுக்கைக்கு 3 மணிநேரத்திகு முன் குடியுங்கள்.

* பிஸ்கட், சிப்ஸ் போன்றவை எளிதில் பசியைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாக இருக்கலாம். ஆனால் இவற்றை அதிகம் உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு ஒரே நேரத்தில் அதிகரித்து, மன நிலையில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி, கோபத்தை ஏற்படுத்தும்.

* சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்ட மிட்டாய்கள், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கி, அதனால் மனதில் ஒருவித எரிச்சலைத் தூண்டும். ஆகவே இவற்றை அதிகம் உட்கொள்ளாதீர்கள்.

* ஆல்கஹால் கார்டிசோலை அதிகமாக வெளியிடச் செய்து, நரம்பு மண்டலத்தைத் தாக்கி, கட்டுப்படுத்த முடியாத அளவில் கோபத்தை உண்டாக்கும். அதனால் தான் ஆல்கஹால் பருகும் பழக்கம் உள்ளவர்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது.