தினமும் 25 நிமிட யோகா செய்வதால் கிடைக்கும் பலன்கள்

நாம் உடலளவிலும், மனதளவிலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மனிதராக இருந்தால் இருபத்திநான்கு மணி நேரத்தில் நிறைய வேலைகளை நம்மால் செய்ய முடியும். இவற்றை கையாள்வதற்கான திறமை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்கள் செயல்களை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது உங்களுடைய திறமையை அதிகரித்துக் கொள்ள முடியுமானால் அதை நீங்கள் செய்ய வேண்டும்.

நான் கற்றுத் தரும் யோகப் பயிற்சியை தினம் 25 நிமிடங்கள் நீங்கள் செய்தால் போதும். ஒருநாளில் பெருமளவு நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்துவீர்கள். ஏனென்றால் உங்களுடைய தூங்குகிற நேரம் மிகவும் குறைந்து விடும்.

உதாரணமாக ஒருநாளைக்கு 8 மணி நேரம் தூங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒருபகுதி நேரத்தை தூங்கியே கழிக்கிறீர்கள், இல்லையா? உங்களுடைய உடலும், மனமும் மிகவும் சக்தி ஓட்டத்துடன் சுறுசுறுப்பாக இயங்குமானால் உங்களுடைய தூங்கும் நேரம் இயல்பாகவே குறைந்துவிடும். அப்படியானால் ஒருநாளில் 3லிருந்து 4 மணி நேரங்களை சேமிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். இல்லையா?

அது மட்டுமல்ல. உங்களுடைய உடலும், மனமும் மிகவும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்த எளிய பயிற்சியை மேற்கொண்ட பலரது அனுபவம் இது. இந்த பயிற்சியை 6லிருந்து 8 வாரங்கள் தொடர்ந்து செய்த ஒருசிலர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அலுவலகத்தில் அல்லது வேறு பணியில் இருக்கும்போது 8 மணி நேரத்தில் மற்றவர்கள் செய்யக்கூடிய செயலை மிக சாதாரணமாக 3லிருந்து 4 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார்கள்.

ஏனென்றால் ஒரு நாள் முழுவதும் உங்களை கவனித்துப் பார்த்தால், அதாவது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு வீடியோ படமாக எடுத்தால், ஒருநாளில் தேவையில்லாமல் எவ்வளவு அசைவுகளைச் செய்கிறீர்கள், தேவையில்லாமல் எவ்வளவு வார்த்தைகளை நீங்கள் உபயோகிக்கிறீர்கள், தேவையில்லாமல் எவ்வளவு செயல்களில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க முடியும்.

ஒரு நாளைக்கு இப்படி செய்து நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். தேவையில்லாமல் எவ்வளவு செயல்களைச் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் அப்போது கண்டு கொள்வீர்கள். உங்களுடைய மனம் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டதாக ஆகிவிட்டால் தேவையில்லாமல் பேசுகின்ற வார்த்தைகளும், தேவையில்லாத செயல்களும், தேவையில்லாத விஷயங்களும் தானாகவே மறைந்துவிடும். அவை விலகி விட்டாலே உங்களுக்கு பெருமளவு நேரம் மிச்சப்படும்.

உங்களுக்கு ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரங்கள் இருக்கிறது. இந்த இருபத்திநான்கு மணி நேரத்தை இருபத்திஆறு மணிநேரமாக நாம் ஆக்கத் தேவையில்லை. இந்த இருபத்திநான்கு மணி நேரமே போதும். இருபத்திநான்கு மணிநேரத்தில் நிறைய செயல்களைச் செய்ய முடியும்.

நாம் உடலளவிலும், மனதளவிலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மனிதராக இருந்தால் இருபத்திநான்கு மணி நேரத்தில் நிறைய வேலைகளை நம்மால் செய்ய முடியும். ஒருங்கிணைக்கப்படாத, ஒருமுனைப்பு இல்லாத ஒரு மனிதராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நேரம் போதவில்லை என்றுதான் சொல்வீர்கள். உங்களில் பெரும்பான்மையானவர்கள் வேலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கவில்லை. எண்ணங்களால் தான் பெருமளவில் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறீர்கள்.

எனவே தயவுசெய்து ஒருநாளில் இருபது நிமிடங்களை உங்களுக்கென ஒதுக்குங்கள். முடிந்தால் காலை 5.30 மணிக்கு எழுந்திருங்கள். சட்டென உங்களுடைய வாழ்க்கையின் தரம் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதைக் காண்பீர்கள். ‘எனக்கு நேரமில்லை’ என்று தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். இது மிகப் பெரிய வித்தியாசத்தை தரும்.