வடக்கு முதல்வரின் சேவை தொடர வேண்டும் – யாழ் முஸ்லிம் சமூகம்

மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நீதியும் நியாயமும் உள்ள உன்னதமான மனிதரான முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடைய சேவை வடக்கில் தொடர்ச்சியாக நிலைத்து நிற்க வேண்டும் என யாழ் முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மௌலவி அஸீஸ் காசிமி தலைமையில் வடக்கில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்குமான நல்லெண்ண சந்திப்பு ஒன்று யாழ்.முஹமதியா ஜும்மா பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது.

அக் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண சபை வினைத்திறனாக இயங்க வேண்டும் எனில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர் ந்தும் தனது சேவையை முன்னிறுத்த வேண்டும்.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் பிளவுகள் துரதிஸ்டவசமானவை அரசியல் ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள், ஆனால் சமூக ரீதியில் நாம் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதற்கு நீதியுள்ள மனிதரான முதலமைச்சர் தான் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் சேவை புரிய வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் அனைத்து மக்களிடத்திலும் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் எனில் முதலமைச்சரின் நீதியான அணுகுமுறை அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.