யாழ்ப்பாணம் கொட்டடி வில்லூன்றிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற திருட்டு முயற்சியின் போது வயோதிபத் தம்பதியரான கணவரும் மனைவியும் அயலவரொருவரும் திருடனால் கடுமையாகத் தாக்கப்பட்டுப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த வயோதிபத் தம்பதியினர் கொட்டடி வில்லூன்றிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய வீட்டிற்கு அடிக்கடி வருகைதரும் நபரொருவர் வயோதிபத் தம்பதியினர் இருவருக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்ததுடன் அவர்களிருவருடனும் அந்நியோன்னியமாகவும் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் வயோதிபப் பெண் மாத்திரம் தனித்திருக்கும் வேளையில் அங்கு வந்த குறித்த நபர் திடீரென வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தை அதிகரித்து விட்டுத் திருடும் நோக்குடன் அவர் மீது சாராமரியாகத் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
அச் சமயம் தற்செயலாக அவ்விடத்திற்கு வந்த கணவர் குறித்த நபரின் செயற்பாட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் ஓடிச் சென்று தனது மனைவியைப் பாதுகாக்கவும் முற்பட்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் வயோதிபத் தம்பதியர் இருவர் மீதும் கத்தி மற்றும் ரீப்பையால் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
அவலச் சத்தம் கேட்டு அயலிலுள்ள வயோதிபப் பெண்ணொருவர் அங்கு வந்துள்ளார். அவர் மீது குறித்த நபர் சாராமரியாகத் தாக்குதல் நடாத்தி விட்டு வீட்டிலிருந்த ஒரு தொகைப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
குறித்த நபர் வீதியால் ஒரு வித பதற்றத்துடன் ஓடிச் சென்றதை அவதானித்த அயலவர்கள் குறித்த வயோதிபத் தம்பதியினரின் வீடு சென்று பார்த்த போது வயோதிபத் தம்பதியினருடன் அயலில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவரும் படுகாயமடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் நிலத்தில் வீழ்ந்து கிடைப்பதைக் கண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கந்தசாமி சாம்பசிவம்(வயது- 75)இ அவரது மனைவியான சாம்பசிவம் சரோஜினிதேவி(வயது- 67) ஆகிய வயோதிபத் தம்பதியினருடன் அயலில் வசிக்கும் தம்பிரத்தினம் ரதி(வயது-65) ஆகிய மூவரே படுகாயங்களுக்குள்ளான வர்களாவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.