இலங்கையில் போர்க்காலத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 72 ஆயிரம் நிலக் கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றம் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்ணி வெடி அபாயமற்ற மாவட்டம் என்ற பிரகடனத்தை மாவட்ட செயலாளார் சார்லஸ் பெற்றுக் கொண்டார்
கண்ணி வெடி அபாயமற்ற மாவட்டம் என்ற பிரகடனத்தை மாவட்ட செயலாளார் சார்லஸ் பெற்றுக் கொண்டார்.
போருக்கு பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடி அபாயமற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்ட 6 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு தற்போது நிலக் கண்ணி வெடி அபாயமற்ற பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வொன்றின் போது நிலக்கண்ணி நடவடிக்கைக்கான மத்திய மையத்தினால் மாவட்ட செயலாளார் பி.எம்.எஸ். சார்ள்ஸிடம் இதற்கான சான்றிதழ் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றம் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, சா. வியாழேந்திரன், பிரித்தானிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா தூதுவர்கள் மற்றும் யப்பான், கனடா தூதவராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றம் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 160 சதுர கிலோ மீற்றர் தூரம் நிலக் கண்ணி வெடிகள் பரவி இருப்பது தொழில் நுட்ப ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.