குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவளிப்பதாக தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
இன்று மாலையில் அ.தி.மு.கவின் தலைமையகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கடந்த 19ஆம் தேதி தன்னைத் தொடர்பு கொண்டுஇ பா.ஜ.கவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி கேட்டதாகவும் அதன்படி கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்ததில், பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்க முடிவுசெய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. யாரை ஆதரிப்பது என்பதை கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா முடிவுசெய்வார் என துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறிவந்த நிலையில், இந்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.கவிற்கு தற்போது தமிழக சட்டப்பேரவையில் 134 சட்டமன்ற உறுப்பினர்களும் புதுச்சேரி சட்டப்பேரவையில் 4 உறுப்பினர்களும் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 50 இடங்கள் அ.தி.மு.க வசம் இருக்கிறது.
அதே நேரத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவால் மூன்று அணிகளாக செயல்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமி தவிர முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினரன் தலைமையிலும் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் பக்கமும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.