தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர் பாபிராஜ், மாநில பொதுச்செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன், ராஜசேகர் உள்பட 64 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
72 மாவட்ட தலைவர்களின் முதல் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 8 பேர் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணங்கள் குறித்து தொலைபேசியில் தெரிவித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தலித் சமுதாய ஜனாதி பதியை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் தான். பா.ஜ.க. புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. 3 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தலித் சமூகத்திற்கு எதிரான கற்பழிப்பு, கொள்ளை பல மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் தலித் சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தும் சூழ்நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டது. பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தது போல் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நீண்டநாள் தொடர்புடைய ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் 22-ந் தேதி (இன்று) ஒத்த கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.
கேரளா, புதுச்சேரி, பா.ஜ.க. ஆளும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு எதிரான சட்டத்துக்கு எதிராக மாற்று சட்டம் கொண்டு வந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தமிழக சட்டமன்றத்திலும் மாற்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
யோகா என்பது காலா காலமாக உள்ள கலை. இது எந்த கட்சிக்கும் சொந்தம் அல்ல. பா.ஜ.க. யோகா மூலம் மத திணிப்பை செய்வது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் கூவத்தூர் சம்பவம் குறித்து கவர்னரிடம் கொடுத்த மனு மீது தலைமைச் செயலாளர், சபாநாயகர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கிறார்களா? என்பதை கவர்னர் தொடர்ந்து கவனிக்க வேண்டும். தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டார் என்பது எனது கணிப்பு. ஒருவேளை அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் ஆரம்பிப்பாரே தவிர காங்கிரசிலோ, பா.ஜ.க.விலோ இணையமாட்டார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை செய்து கொண்டு இருக்கிறேன். அது குறித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொள்ளாத 8 மாவட்ட தலைவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
கூட்டத்தில், தமிழக உரிமைகளை தாரைவார்க்கும் அ.தி.மு.க. ஆட்சியை மாற்ற வேண்டும். மக்கள் விரோத போக்கு கொண்ட பா.ஜ.க. அரசை அகற்றி 2019 பொதுத்தேர்தலில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.