பிரிட்டன் அரசி எலிசபத்தின் கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரிட்டன் அரசி எலிசபத்தின் கணவரும் எடின்பரோ கோமகன் என்றழைக்கப்படும் அந்நாட்டின் இளவரசருமான பிலிப்(96) ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் அரசி ராணி எலிசபத்தின் கணவரும் இளவரசருமான பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பிறகு அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த மே மாதம் அறிவித்தது.

இந்நிலையில், எடின்பரோ கோமகனும் இளவரசருமான பிலிப் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய உடல் உபாதைகளால் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நேர்ந்தது என்பது தொடர்பான விரிவான தகவல்கள் ஏதும் அந்த செய்திக் குறிப்பில் விவரிக்கப்படவில்லை.

தற்போது 96 வயதாகும் இளவரசர் பிலிப்புக்கு கடந்த 2013 ஜூன் மாதம் வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு பெரிய அளவிலான உடல்நலக்குறைவு எதுவும் அவருக்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சிறிய உடல் உபாதைகளால் அவர் அவ்வப்போது பாதிக்கப்பட்டு, அதற்கான தொடர் சிகிச்சைகள் பெற்று வந்தார். இருப்பினும், பக்கிங்ஹாம் அரண்மனை சார்ந்த சில பொது நிகழ்ச்சிகளிலும் அவர் அவ்வப்போது கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நோய்த்தொற்று அறிகுறிகளால் அவர் தற்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.