ரஜினிகாந்தின் ‘காலா’ பட வேலைகள் மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் 2 வாரங்கள் கலந்து கொண்டு நடித்தார். கருப்பு வேட்டி-ஜிப்பா அணிந்து தாதாவாக தமிழர் பகுதியான தாராவியில் வலம் வருவது, நலிந்த மக்களிடம் குறைகள் கேட்பது, தமிழர்களுடன் ஆடிப்பாடுவது, வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.
மோட்டார் சைக்கிள் பின்னால் ரஜினி உட்கார்ந்து செல்லும் காட்சிகளையும் இயக்குனர் ரஞ்சித் குறுகலான தெருக்களில் கேமராவுடன் சென்று படம் பிடித்தார். ரஜினிகாந்தை காண தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் படப்பிடிப்பு காட்சிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதால் படக்குழுவினர் கவலைப்பட்டனர்.
இதனால் தனியார் பாதுகாவலர்களை நியமித்து ரசிகர்கள் அத்துமீறலையும் செல்போனில் படம் எடுப்பதையும் தடுத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் கடந்த வாரம் சென்னை திரும்பினார். மற்ற நடிகர்கள் மும்பையிலேயே முகாமிட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து வந்தனர்.
ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை மீண்டும் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் இன்று இரவு அல்லது நாளை காலை மும்பை புறப்பட்டு செல்கிறார். அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்கிறார். படத்தில் கதாநாயகியாக வரும் ஹூமா குரேஷியும் ரஜினியும் இணைந்து நடிக்கும் காட்சிகளும் படமாகிறது.
ரஜினிகாந்த் ஏற்கனவே 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
அப்போது சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்றும் போருக்கு தயாராக இருங்கள் என்றும் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. காலா படப்பிடிப்புக்கு இடையில் அடுத்த மாதம் விடுபட்ட ரசிகர்களை மீண்டும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார்.