தோள்பட்டையை உறுதியாக்கும் ஏரோ பாக்ஸிங் பயிற்சி

ஒரு நாளை உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும். கடமைக்கு ஜாகிங், நடைப்பயிற்சி என்று செல்லாமல், ஆர்வத்தோடு உடற்பயிற்சிகளை செய்துவந்தால், ஆரோக்கியம் நம் வசமாகும்.

விரிப்பில் இடது காலை முன்புறம் வைத்து நேராக நிற்க வேண்டும். கைகளில் டம்பிள்ஸை எடுத்து, கழுத்துப் பகுதியின் அருகே பிடிக்க வேண்டும். ஒரு குத்துச்சண்டை வீரர் போட்டிக்கு தயாராக நிற்பது போன்ற நிலை இது. இப்போது, இடது கையை தோள்பட்டையோடு சேர்த்து வைத்துக்கொண்டு வலது கையை எதிரே ஒருவர் நிற்பது போல கற்பனை செய்துகொண்டு, அவரை நோக்கி நீட்ட வேண்டும்.

பிறகு, வலது கையை தோள்பட்டைக்கு அருகே கொண்டு வந்து, இடது கையை வலதுபுறம் முன்னே நீட்ட வேண்டும். இது ஒரு செட். பிறகு, வலது காலை முன்புறமாக அகட்டி வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இப்படி, தலா 15 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பலன்கள்:

கைகளில் உள்ள தசை உறுதியாகிறது.

தோள்பட்டை உறுதியாகும்.

முழு உடலுக்கு அசைவு ஏற்படுவதால், உடலின் நிலைத்தன்மை மேம்படும்.