இலங்கையில் மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அரசr வைத்தியசாலைகளில் வைத்தியசேவைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதலை கண்டித்து அரசு மருத்துவர்கள் இந்த பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் மாலபே என்னுமிடத்திலுள்ள ” சைட்டம் ‘ எனப்படும் தனியார் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரசு மருத்துவர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவ அமைப்புகளினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படுகிறது.
தலைநகர் கொழும்பில் ஒன்று கூடி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் நகர மண்டப மைதானத்திலிருந்து சுகாதார அமைச்சு அலுவலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் சுகாதார அமைச்சு அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளை அங்கு குழப்பமான நிலை காணப்பட்டது.
அந்த இடத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து மாணவர்களை கலைப்பதற்கு போலிஸாரால் தடியடி பிரயோகம் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் 23 மாணவிகள் உள்ளிட்ட 96 மாணவர்கள் காயமுற்றனர். 5 போலிஸாரும் காயமுற்றனர். காயமுற்ற மாணவர்களில் 60 பேர் வரை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அரசு மருத்துவர்கள் சங்கத்தினால் வியாழக்கிழமை முதல் பணிப் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக அரசு வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவுகள் மாதாந்த மற்றும் வாராந்த கிளினிக் சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வைத்தியசாலைகளுக்கு சென்றிருந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர் .