முறையற்ற அரசியல் தூண்டுதல்கள் மாணவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்கின்றது

முறையற்ற அரசியல் துண்டுதல்கள் பல்கலைக்கழக மாணவர்களை தவறான பாதையில் இட்டு செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலன்னறுவை லங்காபுர மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இத்தகைய செயல்களுக்காக தாம் எந்தவொரு பல்கலைக்கழக மாணவரையும் குறை கூறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருடத்திற்கு சுமார் இரண்டரை இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

அவர்களுள் சுமார் தொண்னூராயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை பெறுவதற்கான தகைமையை பெற்றுக்கொண்டபோதிலும், அவர்களுள் இருபத்தையாயிரம் மாணவர்களுக்கு மாத்திரமே பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படுகின்றது.

எனவே ஏனைய மாணவர்களின் உயர் கல்விக் கனவினை நிறைவேற்றுவதற்காக அரச பல்கலைக்கழகங்களைப் போன்று உயர் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களும் நாட்டில் உருவாகவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நாட்டின் எந்தவொரு பிள்ளையினதும் கல்வி உரிமையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாராலும் வரையறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே வருடாந்தம் சுமார் 80,000 மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதுடன், தமது கல்வியை பெறுவதற்காக குறைந்த வருமானமுடைய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தமது வீடு வாசல்களை அடகு வைத்து கல்வியை தேடி நாட்டை விட்டு செல்லும் துயரமான நிலைமையே இங்கு காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்களைப் போன்று ஏனைய கல்வி நிறுவனங்களும் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படும் தரத்திற்கு ஏற்ப கல்வியை வழங்க வேண்டும் என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன்,

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர்களது வேண்டுகோள்களுக்கேற்ப பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.