பொதுபலசேனாவுடன் பொய்யாக மோதுவதுபோல் செயற்பட்டு எமக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர்,
ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும், பொதுபலசேனாவிற்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமே.
ஞானசார தேரர் என்பவர் ஜாதிக ஹெல உறுமயவுடன் இணைந்தே செயற்பட்டு வந்த ஒருவராவார். ஞானசாரருக்கு இங்கு யோசனைகள் கொடுக்கப்பட்டு வருகின்றதா என்பது குறித்து சொல்லத் தேவையில்லை.
ஆனால் அமைச்சர் பாட்டலி சம்பிக்கவிற்கு ஓர் எச்சரிக்கையினை விடுக்கின்றேன். பொய்யாக பொதுபலசேனாவினை தாக்குவதற்கு முற்பட்டு எமக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டாம்.
பொதுபலசேனா பற்றி பொய்யான பிரச்சாரங்களை செய்ய வேண்டாம். ஜாதிக ஹெல உறுமயவிற்கும் பொதுபலசேனாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது முழு நாட்டுக்கும் தெரிந்த விடயம்.
ஞானசார தேரரை இயக்கினார்களா இல்லையா என்பது பற்றி தெளிவாக என்னால் கூற முடியும் ஆனால் அதனைச் செய்யமாட்டேன். என்னிடம் உள்ள இரகசியங்களை வெளியிட வேண்டுமா என்பதனை இதுவரை முடிவு செய்யவில்லை.
ஆனால் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமாயின் கசப்பான பல உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்கவிற்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் எனவும் கம்மன்பில தெரிவித்தார்.