குமார் குணரட்னத்திற்கு இலங்கைக் குடியுரிமை!

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்திற்கு இலங்கைக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திற்கு இது தொடர்பான கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உட்துறை அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன மற்றும் அமைச்சின் செயலாளர்களது கையொப்பங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நொயல் முதலிகே எனப்படும் குமார் குணரட்னத்திற்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதாக கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்து கொண்டதாக குமார் குணரட்னம் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமைக்காக குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டமை குறித்து குமார் குணரட்னம் கருத்து வெளியிடுகையில்…

ஜனநாயகம் பற்றி பேசி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாம் முன்னெடுத்த போராட்டங்களுக்கு பதிலளிக்க முடியாது குடியுரிமை வழங்கியுள்ளது.

முன்னிலை சோசலிச கட்சி, ஊடகங்கள், பல்வேறு தரப்பினர், பாடசாலை நண்பர்கள், சிவில் பிரஜைகள், ஏனைய கட்சிகளைச் சார்ந்தோர் இணைந்து அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்தனர்.

சிறையிலிருந்து விடுதலையானதன் பின்னர் இலங்கை குடியுரிமை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

அதன் அடிப்படையில் சட்டத்தரணி ஊடாக அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்வதாக அறிவித்திருந்தேன்.

எனது அரசியல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என குணரட்னம் தெரிவித்துள்ளார்.