பல்கலைக்கழக மாணவர்களை நான் குறைகூறவில்லை! ஜனாதிபதி

பல்கலைக்கழக மாணவர்களை தாம் குறைகூறவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவ லங்காபுர மஹா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர்களுக்கு அநீதி இழைத்து அவர்களின் வரப்பிரசாதங்கள் மறுக்கப்பட்டு, இலவச கல்வியை முடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்த முயற்சிற்காக பல்கலைக்கழக மாணவர்கள் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர்.ஆண்டு ஒன்றில் அரச பல்கலைக்கழகங்களுக்காக சுமார் 25000 மாணவ மாணவியரே இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

அரச பல்கலைக்கழகங்களுக்கு நிகரான தரத்தைக் கொண்ட தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இதன்படி, மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் சில தரப்பினர் பல்கலைக்கழக மாணவர்களை பிழையாக வழிநடத்தி வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.