நீதிபதி கர்ணனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன், கொல்கத்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், நீதிபதிகள் மீது சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதில், அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தலைமறைவான கர்ணன், கடந்த 20-ந் தேதி இரவு, கோவை புறநகரில் உள்ள ஒரு பண்ணை இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவரை விமானம் மூலம் சென்னை வழியாக கொல்கத்தாவுக்கு கொல்கத்தா போலீசார் அழைத்து சென்றனர்.

அங்குள்ள பிரசிடென்சி சீர்திருத்த இல்லத்தில் (ஜெயில்) நீதிபதி கர்ணன் அடைக்கப்பட்டார். சற்று நேரத்தில் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், கொல்கத்தாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, அவர் ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று மீண்டும் அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அங்கு அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பிரசிடென்சி ஜெயிலின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீதிபதி கர்ணனுக்கு உடல்நிலை சரியில்லை. மிகவும் பலவீனமாக இருக்கிறார். புதன்கிழமை, அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர் ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் இரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டார். டாக்டர்கள் பரிந்துரைத்த உணவு அவருக்கு வழங்கப்பட்டது.

ஜெயிலில், நீதிபதி கர்ணனுக்கு விசேஷ கவனிப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. மற்ற தண்டனை கைதிகளைப் போலவே அவர் நடத்தப்பட்டார். அவருக்கு விசேஷ வசதி எதுவும் வழங்கவில்லை.

வியாழக்கிழமை (நேற்று) காலையில், அவர் மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்டார். காலை சிற்றுண்டி சிறிதளவே சாப்பிட்டார்.

எனவே, அவரை மீண்டும் அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம்.

அவரது உடல்நிலையின் தன்மையை அறிந்து கொள்ள பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஈ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் முடிவுகள், இயல்புக்கு மாறாக இருந்ததால், அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆகவே, நீதிபதி கர்ணன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.