எதிர்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமாருக்கு தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கினைந்து ஆதரவளிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தின.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தனர். இந்நிலையில், தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமாருக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அவர் ”பொதுவேட்பாளர் என பா.ஜ.க சொன்னது வெறும் பேச்சுக்காகத்தான்” என கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற மீராகுமாரை வாழ்த்துவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவு அளிக்கப்படும் என அ.தி.மு.க-வின் இரு அணிகளும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.