ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக தலித் தலைவரான ராம்நாத் கோவிந்த் கடந்த 19-ந் தேதி அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அவருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டார்.
அப்போது அவர், “ராம்நாத் கோவிந்த் ஆரம்பத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். இயக் கத்துடன் தொடர்பு உடையவர், பாரதீய ஜனதாவை சேர்ந்தவர். இருந்தபோதிலும், அவர் ஒரு தலித்தாக இருப்பதால், அவருக்கான எங்களது ஆதரவு நிலைப்பாடு எதிராக அமையாது” என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நேற்று அறிவிக்கப்பட்டார். இவரும் தலித் இனத்தலைவர் ஆவார்.
இதையடுத்து மாயாவதியின் நிலைப்பாடு மாறியது. அவர் மீரா குமாருக்கு தனது கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமார், பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தைவிட திறமையானவர், பிரபலம் ஆனவர். எனவே ஜனாதிபதி தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு அளிப்போம்” என்று குறிப்பிட்டார்.