பா.ஜனதா கூட்டணியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை: ஐக்கிய ஜனதாதளம்

ஐக்கிய ஜனதாதள தேசிய செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியதாவது:-

பா.ஜனதா கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை நாங்கள் ஆதரிப்பது தனிப்பட்ட சம்பவம். ராம்நாத் கோவிந்த் பீகார் கவர்னராக இருந்த 2 ஆண்டுகளும் மாநில அரசுக்கு மிகவும் நேர்மையுடனும், மோதல்போக்கு இல்லாமலும் செயலாற்றினார். அவரது பெருந்தன்மை மற்றும் நடத்தை காரணமாக ஈர்க்கப்பட்ட நிதிஷ்குமார், ஜனாதிபதி வேட்பாளராக அவரை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துள்ளார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை.

சென்னையில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவின்போது கூட நிதிஷ்குமாரும், சீதாராம் யெச்சூரியும் முன்னாள் மேற்கு வங்காள கவர்னர் கோபால கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிக்கலாமா என ஆலோசித்தனர். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்பாராதவிதமாக ராம்நாத் கோவிந்த் பெயரை அறிவித்துவிட்டது. நரேந்திர மோடி அரசு அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நாடு முழுவதும் மத கலவரங்கள் நடந்துவருகிறது. எனவே எங்கள் கட்சி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த அங்கமாகவே நீடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.