பயிற்சியாளர் பதவியில் கும்ப்ளே இடத்தை நிரப்புவது கடினம்: ஷேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே திடீரென பதவி விலகினார். கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதலால் அவர் பதவி விலகினார்.

பயிற்சியாளர் பதவியில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை கும்ப்ளே தெரிவித்து இருந்தார்.

விராட் கோலிக்கும், தனக்கும் சுமூகமான உறவு இல்லை என்றும், நான் பயிற்சியாளராக நீடிப்பதை அவர் விரும்பவில்லை என்றும் இருவரும் இணைந்து செயல்படுவது ஏற்கத்தக்கதாக இல்லை என்பதால் ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.

விராட் கோலியின் இந்த அடவாடித்தனமான செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கும்ப்ளே பதவி விலகியதால் இலங்கை தொடருக்கு முன்பு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுகிறார்.

இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் கும்ப்ளே இடத்தை நிரப்புவது கடினம் என்று பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவரான ஷேவாக் கருத்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கும்ப்ளேயின் பயிற்சியின் கீழ் நான் விளையாடியது இல்லை. அவர் எனக்கு சீனியர். கேப்டனாக இருந்தவர். நான் அணிக்கு மீண்டும் திரும்பிய போது அவரது தலைமையில் தான் ஆடி இருக்கிறேன். அவரது தலைமையின் கீழ் இந்தியா வியக்கத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளது.

பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகியுள்ளார். அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது. இந்திய அணிக்கு இந்தியர் பயிற்சியாளாக இருப்பதற்கும், வெளிநாட்டை சேர்ந்தவர் பயிற்சியாளராக இருப்பதற்கும் அதிகளவு வேறுபாடு இல்லை.

இந்திய பயிற்சியாளர்கள் வீரர்கள் இடையே தகவலை பரிமாறுவது எளிது. ஆங்கிலத்தை விட இந்தியில் பேசுவது எளிதாக இருக்கும். மேலும் இந்திய பயிற்சியாளரால் நகைச் சுவையுடன் செயல்பட முடியும்.

இவ்வாறு ஷேவாக் கூறி உள்ளார்.

பயிற்சியாளர் பதவிக்கு தற்போது ஷேவாக், டாம் மோடி, பைபஸ், தோடா கனேஷ், லால்சந்த் ராஜ்புத் ஆகிய 5 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

மேலும் பலர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய அழைப்பது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இன்னும் தகுதியான வரை அடையாளம் காண முடியும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

இதனால் ஏற்கனவே இந்திய அணியின் இயக்குனராக இருந்த ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.