நடிகை பூமிகா அளித்த பேட்டி வருமாறு:-
“யோகா என்பது, வேத காலத்தில் இருந்து நமக்கு கிடைத்த அற்புதமான சொத்து. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் அது ஆதாரமாக இருக்கிறது. ஆன்மா, மனம், உடல் அனைத்தையும் யோகா இணைக்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால்தான் அந்த அனுபவத்தை நாம் பெற முடியும். இதனால்தான் எனது கணவர் பரத் தாகூர் ரிஷிகேஷ், ஹரித்துவார், இமயமலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.
மனதில் வைராக்கியமும், தூய்மையும் கடவுள் மீது அதீத நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் யோகிகளாக மாறுகிறார்கள். யோகா பயிற்சியை ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ செய்தால் மட்டும் போதாது. எப்போதும் யோகா நிலையிலேயே இருக்க வேண்டும். நான் 25 வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் ஆசனம் செய்கிறேன். யோகா பயிற்சி என்னை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கிறது. வலிமையாகவும் வைத்து இருக்கிறது. யோகா என்பது உடற்பயிற்சி மட்டும் இல்லை. நம்மை நாமே உணர்ந்து கொள்ள வைக்கும் ஒரு சக்தி. கடவுள் மீது நம்பிக்கை உண்டு. ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது என்பதை முழுமையாக நம்புகிறேன். அந்த சக்தியோடு நான் பேசுகிறேன்.
எனக்கு நானே ஒரு உலகத்தை உருவாக்கி அதற்குள் சவுகரியமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இதனை தியானம் என்றும் சொல்லலாம். எனது அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவரிடம் இருந்துதான் எனக்கும் தெய்வ பக்தி வந்தது. சாமி படத்தின் முன்னால் நின்று ஆரத்தி எடுப்பது, விதவிதமான பிரசாதங்களை படைப்பது, சிலமணி நேரம் உட்கார்ந்து பூஜைகள் செய்து பிரார்த்திப்பது போன்றவற்றால் ஒருவருக்கு ஆன்மிக உணர்வுகள் வந்து விடாது.
24 மணி நேரமும் கடவுள் சிந்தனை இருக்கவேண்டும் அவர் கூடவே இருக்கிறார் என்று நம்ப வேண்டும். நான் அப்படித்தான் இருக்கிறேன். நள்ளிரவு விழிப்பு வந்தால் கூட கடவுளை நினைப்பேன். நாம் என்ன செய்தாலும் மேலே ஒருவர் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதுதான் கடவுள்”.
இவ்வாறு பூமிகா கூறினார்.