ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க அரசாங்கத்தினால் தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேகநபராகும்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமான உறவுகளை அவர் கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இடம்பெறும் மாநாடொன்றில் உரையாற்றுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது இலங்கையின் சமகால அரசாங்கத்தினால் தேடப்பட்டு வரும் உதயங்க வீரதுங்கவும் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே உதயங்க வீரதுங்க பாகிஸ்தான் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயுத விற்பனை, கொலை செய்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பில் உதயங்க வீரதுங்க இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் ஒருவராகும்.
உதயங்க இலங்கைக்கு வராமல் மறைந்துள்ள நிலையில் அதற்கு, மஹிந்தவின் முழுமையான ஆதரவு வழங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
வெளிநாடுகளுக்கு மஹிந்த விஜயம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உதயங்க வீரதுங்கவும் அங்கு பிரசன்னமாகி இருப்பார்.
இலங்கையின் சட்டங்களுடன் மஹிந்த தொடர்ந்து விளையாடுவதுடன் குற்றவாளிகளை பாதுகாப்பது ஏன் என சந்தேகம் எழுந்துள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உதயங்க வீரதுங்க யுக்ரேனில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனையடுத்த அவரை கைது செய்ய சர்வதேச பொலிஸார் உதவியை சமகால அரசாங்கம் கோரியுள்ளது.
இவ்வாறான நிலையில் உதயங்க வீரதுங்கவுடன் மஹிந்த நெருக்கிய தொடர்புகளை பேணி வருகின்றமையானது, அவரிடமும் விசாரணைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.