வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சங்கத்தின் 6 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்துள்ளதாகவும் அதனை திருப்பிச்செலுத்த வடமாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மக்களால் கையொப்பமிடப்பட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கடிதங்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் க.சுரேஸ்பிரேமச்சந்திரன் உட்பட்டோருக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
குறித்த கடிதத்தில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தீர்ப்பின்படி கடற்றொழிலாளர் சங்கம் முல்லைத்தீவுக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களோடு சீர்செய்யப்பட வேண்டிய ஆறு மில்லியன் ரூபாவினை உடன் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரல்.
என்று தலைப்பிடப்பட்டு,
முதலமைச்சர் தன்னுடைய சொந்த அமைச்சரவையிலேயே மோசடிகளை அடையாளங் கண்டு மோசடிக்காரர்களுக்கு எதிராக நியாயமான தீர்ப்பை வழங்கியதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றோம்.
அதேவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து தற்போது வடமாகாணசபை உறுப்பினராக இருக்கும் து.ரவிகரன் அவர்கள் 90 இலட்சம் ரூபாவினை மோசடி செய்து கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்.
மக்கள் முன் பகிரங்கமாக நடந்த விசாரணையில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களால் 90 இலட்சம் ரூபாவினை மீளச் செலுத்துமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
பணம் செலுத்தாததன் காரணத்தினால் ரவிகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஊரறிந்த, புலிகள் அறிந்த உண்மைச் சம்பவம். பின்னர் 30 இலட்சம் ரூபா மோசடி செய்த பணத்தினைச் செலுத்தி மீதிப் பணத்தினைச் செலுத்துவதற்கு கொழும்பு சென்றுவர வேண்டும் எனக் கூறி வன்னி மண்ணை விட்டு வெளியேறினார்.
வெளியேறிய போது பிள்ளையுடன் வெளியேறியவர் நீர்கொழும்பில் அமைந்துள்ள ஈபி.ஆர்.எல்.எவ் வரதராஜப்பெருமாள் காரியாலயத்தில் சரணடைந்தார்.
பின்னர் மோசடிப் பணத்துடன் இந்தியா சென்ற இவர் தனது பிள்ளைகளைத் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பித்தார்.
பிற்காலத்தில் இவர் விடுதலைப் புலிகளை ஏமாற்றியதால் வன்னியில் இருந்த தாதியரான இவரது மனைவி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பணத்தைச் செலுத்துமாறு கூறி அவரது மனைவியும் தடுத்துவைக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் சுகாதார சேவை சூரியகுமார் நேரடியாகத் தலையிட்டு ரவிகரனது மனைவி விடுவிக்கப்பட்டார். பின்னர் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தனர்.
ஒரு மாதகாலத்திற்கு மேலாக விடுதலைப் புலிகளின் சிறையிலிருந்த ரவிகரன் விடுதலைப் புலிகளை ஏமாற்றி வன்னியை விட்டு வெளியேறி மக்களின் பணத்தைச் சூறையாடிய ரவிகரன் இன்று தேசியம் பேசுவதை நம்பப்போகின்றீர்களா?
இதில் ஒப்பமிடும் நாங்கள் அனைவரும் இவரது மோசடியை நேரடியாக அறிந்தவர்கள். மக்களோடு வன்னியில் இருந்தவர்கள். ஒரு விசாரணை என்று வரும்போது நேரடியாக வாக்குமூலம் தரத் தயாராக இருக்கின்றோம்.
எமது நோக்கம் மக்களின் பணம் அதாவது கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு சேர்ப்பிக்கப்பட வேண்டும்.
இன்று உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாசம் இவரது கையாட்களாகும். எனவே எமக்கு ஒரு சந்தர்ப்பம் தருமிடத்து இவ்விடயம் தெரிந்த பொதுமக்கள், முன்னர் விசாரணை நடத்தியவர்கள் அக்காலப்பகுதியிலிருந்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் அனைவரையும் சாட்சியத்துக்காக உங்கள் முன் நிறுத்தத் தயாராக இருக்கின்றோம்.
எனவே நீதியரசர் முதலமைச்சர் ஆகிய நீங்கள் இவ்விடயத்தில் முல்லை மாவட்ட மக்களின் பொது பண மோசடியை வெளிக்கொண்டு வராதவிடத்து அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தினை முன்னெடுத்து உலகறியச் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
எனவே இப்பணத்தினை உரிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாசத்திற்குக் கட்டிமுடிக்க ஆவன செய்ய வேண்டும் என்பதனைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். என்று அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.