ஞானசாரர் தலைமறைவானது ஏன்? பிணை இல்லா வழக்கில் பிணை! அதிர்ச்சி தரும் உண்மைகள்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் விவகாரம் அவரது சரணடைவிற்கு பின்னர் தணிந்து விட்டதாக சித்தரிக்கப்படுகின்றது.

ஆனாலும் இந்த விடயம் முற்று முழுதாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஓர் நாடகம் என்ற உண்மை தற்போது வெளிவந்து விட்டதாக கூறப்படுகின்றது.

5 பொலிஸ் குழுக்கள் தீவிரமாக தேடிய ஞானசாரர் சர்வ சாதாரணமாக நீதிமன்றில் சரணடைந்து விட்டு பிணையில் சென்றார். இந்த விடயத்தில் ஞானசாரருக்கு சாதகமாக பொலிஸார் நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஞானசாரருக்கு எதிராக பிணை பெற முடியாத குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதனை மாற்றியமைப்பதற்காகவே அவர் தலைமறைவு நாடகத்தினை செய்துள்ளார் எனவும், இந்த உண்மைகள் கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல மூலமாகவே வெளிவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஞானசார தேரரின் 73854 என்ற வழக்கின் போது பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவிடம் நீதவான் இது குறித்து விசாரித்ததாக கூறப்படுகின்றது.

வழக்கின் போது, பிரதி பொலிஸ் மா அதிபரிடம் நீதவான் கூறுகையில்,

ஞானசாரருக்கு எதிராக முதலில் “பீ ” அறிக்கையினை தயார் செய்தீர்கள். அந்த அறிக்கையில் பொலிஸ் வாகனங்களை தீ வைத்து கொளுத்துவோம், பொலிஸாரின் சீருடைகளை கழற்றுவோம்.,

முஸ்லிம்களைக் கொலை செய்வோம் போன்ற பல பாரதூரமான குற்றங்கள் குறிப்பிடப்பட்டு ஐ. சி. சி. பி. ஆர் சட்டத்தின் கீழ் அறிக்கை படுத்தினீர்கள். எனினும் தற்போது அந்த அறிக்கையை முற்றாக மாற்றியுள்ளீர்கள்.

நாடே பற்றி எரியும் அளவிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆரம்ப அறிக்கையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தீர்கள்.

முன்னைய அறிக்கையில் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவுமே இப்போதைய அறிக்கையில் இல்லை. ஏன் அவ்வாறு மாற்றப்பட்டது? என நீதவான் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி எழுப்பி தமது அதிருப்தியினையும் தெரிவித்துள்ளார்.

ஞானசாரருக்கு எதிராக 2007ஆம் ஆண்டின் 56ஆவது சிவில் மற்றும் அரசியல் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் நீதவானுக்கு பொலிசார் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

எனினும் குறித்த அறிக்கை இடைவெளியீட்டு மனு மூலமாக அகற்றப்பட்டு, புதிய குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கையே ஞானசாரரின் வழக்கின் போது சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஆரம்பத்தில் பொலிஸார் மிக இரகசியமாக அறிக்கை தயார் செய்து அதனை பாதுகாப்பாக நீதவானிடம் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஞானசார தேரரின் வழக்கின் போது நீதவான் கருத்து வெளியிடுகையில்,

இதற்கு முன்னர் மிகவும் இரகசியமாக இது தொடர்பில் “பீ ” அறிக்கையை என்னிடம் ஒப்படைத்தீர்கள். அதனை ஐ. சி. சி. பி. ஆர் சட்டத்தின் கீழ் நான் பாதுகாத்தேன்.

அந்த அறிக்கையில் இருந்த குற்றச்சாட்டுகளை பார்வையிட்டபோது அதன் அபாய விளைவுகளை அறிந்து கொண்டேன். நாடே பற்றி எரியும் குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் காணப்பட்டன.

எனினும் புதிய அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட வில்லை அது ஏன்? ஏன் இரு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன எனவும் நீதவான் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் பதில் அளிக்கையில், பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடிய பின்னரே புதிய அறிக்கையினை சமர்ப்பித்துள்ளோம் என்று பதில் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நீதவான்,

ஞானசாரருக்கு பிணை வழங்க பொலிஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. சாதாரண நபர் என்றால் இவ்விதமாக நடந்து கொள்வீர்களா? வேறு ஒருவர் எனும் போது 14ஆவது சட்டத்தின் அடிப்படையில் பிணை எதிர்ப்பினை வெளியிடுவீர்கள்.

அதேபோல் முதலாவதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி பார்க்கும் போது ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது. அவை பாரதூரமான குற்றங்களாகும்.

எனினும் இரண்டாவது அறிக்கை மாற்றப்பட்டுள்ளது. முதல் அறிக்கையை இரவு வேளையில் என்னிடம் ஒப்படைத்து அபாயகரமான விடயம் இது எனவும் கூறினீர்கள்.

மேலும், பொலிஸாரின் சீருடையை கழற்ற முயன்றதாகவும் பொலிஸாரை தாக்க முயன்றதாகவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் புதிய அறிக்கையில் அந்த விடயங்கள் உள்ளடக்கப்பட வில்லை எனவும் நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர், இந்த விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் நான் பொறுப்பாக இருக்கவில்லை. பின்னர் ஆழமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, முதல் அறிக்கையின் குற்றச்சாட்டுகளை சந்தேகநபர் செய்தாரா என நீதவான் கேள்வி எழுப்ப. ஆம் என்ற பதிலையே பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவசரமாக இந்தப்பிரச்சினையை தீர்த்து சந்தேக நபருக்கு எதிரான குற்றப் பத்திரிகையினை வழங்குவதற்காகவே இந்தவகையில் செயற்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

என்றாலும் பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக பொது மக்களிடையே நம்பிக்கையற்ற தன்மை ஏற்படும் எனவும் பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது,

ஞானசார தேரருக்கு எதிராக பலமாக குற்றச்சாட்டுகள் பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர். அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிணையும் பெற முடியாது என்ற காரணத்திற்காகவே தேரர் தலைமறைவாகி இருந்துள்ளார்.

எனவே பொலிஸார் தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் பின்னர் குறித்த குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஆரம்பத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றாக மாற்றப்பட்டு விட்டதால் பிணை கிடைக்கும் என்பதனை அறிந்து கொண்ட காரணத்தினாலேயே, ஞானசாரர் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆக பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கைகளின் பின்னணியிலும், நீதி செயற்பாடுகளின் பின்னணியிலும் உயர் மட்ட அதிகாரங்கள் செயற்பட்டுள்ளன எனவும் கூறப்படுகின்றது.

அதேபோல் பொலிஸாரின் நடவடிக்கைகளும் ஞானசாரர் மறைந்திருந்த நிலையிலும் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் அவரின் வழக்கு தெளிவுபடுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

எனவே அவருடைய செயற்பாடுகளின் பின்னணியில் அரசு தரப்பின் பங்களிப்புகளும் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.