கிரென்பெல் டவர் அடுக்குமாடி கட்டட தீ விபத்தைத் தொடர்ந்து லண்டனில் உள்ள சுமார் 600 கட்டிடங்களில் பாதுகாப்பு சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரென்பெல் கட்டடத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய உலோகப்பூச்சு பூசப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த உலோகப்பூச்சுக்கள் பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் பொருட்டும், அவற்றை மின் விசை கடத்தாது இருக்கும் பொருட்டும் பூசப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அவை எளிதில் தீப்பிடித்து எரியக் கூடியவை என்பதாலேயே கிரென்பெல் கட்டடம் தீப்பிடித்து எரிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய கட்டடங்களில் இவ்வாறான உலோகப் பூச்சுக்களை அப்புறப்படுத்துவதில் அக்கறை செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெரிவு செய்யப்பட்ட சுமார் 600 கட்டடங்களில் பாதுகாப்பு தொடர்பிலான சோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அதற்கான ஆயத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை கிரென்பெல் கட்டடம் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 79 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.