பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியது கும்ப்ளேயின் தனிப்பட்ட முடிவு: கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட் கோலிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது.

இதற்கு கும்ப்ளேவும் விண்ணப்பித்து இருந்தார். பயிற்சியாளரை தேர்வு செய்யும் தெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு கும்ப்ளேவை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் பயிற்சியாளராக இருக்கும்படி கேட்டு கொண்டது. அதற்கு அவரும் முதலில் சம்மதித்தார். ஆனால் அவர் திடீரென்று பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனால் தலைமை பயிற்சியாளர் இல்லாமலே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று இருக்கிறது. வீராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் விலகியது உறுதியானது.

இந்த நிலையில் கும்ப்ளே விலகல் குறித்து ஆலோசனை கமிட்டி உறுப்பினரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு புறப்படும் சமயத்தில் கும்ப்ளே ராஜினாமா செய்து இருக்கிறார். அது அவரது தனிப்பட்ட முடிவு. அதுபற்றி மேலும் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் அனில் கும்ப்ளே வீரர்களை குழந்தைகள் போல் கண்டிப்புடன் நடத்தியதாகவும் இது வீராட் கோலிக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால்தான் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.