பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர், இந்தியா-பாகிஸ்தான் அணிகளில் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டதும் எரிச்சல் அடைந்தார். “ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் இதே கேள்வியை கேட்பீர்களா? அவர்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார் என்று கேட்பீர்களா? என்னிடம் எப்போதும் இப்படி தான், பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார்? என்று தான் கேட்க வேண்டும்” என்று சற்று கோபமாக பதில் அளித்தார்.
மிதாலிராஜ் மேலும் கூறுகையில், ‘ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கும், எங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண்கள் போட்டியை டெலிவிஷனில் பெரும்பாலும் நேரடியாக ஒளிபரப்பு செய்வது கிடையாது. கடைசி இரண்டு உள்நாட்டு தொடர்களின் போது இந்திய கிரிக்கெட் வாரியம் நேரடி ஒளிபரப்பு செய்ய முயற்சித்தது.
சமூக வலைதளங்களின் மூலம் பெண்கள் கிரிக்கெட் நிறைய முன்னேற்றம் கண்டு இருக்கிறது. ஆனாலும் இன்னும் அங்கீகாரம் தேவை என்றே கருதுகிறேன். ஆண்களின் கிரிக்கெட் தான் இலக்கை நிர்ணயிக்கின்றன. அந்த தரத்தை எட்டிப்பிடிக்கவே நாங்கள் எப்போதும் முயற்சிக்கிறோம்.
அது மட்டுமின்றி ஏதாவது ஒரு தருணத்தில் நாங்கள் எல்லோரும் ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் தான்’ என்றார். உலக கோப்பையில் இந்திய பெண்கள் அணி சிறப்பாக செயல்படுவதற்கு ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.