ரஜனி அரசியலுக்கு தகுதியற்றவர் – சுப்ரமணியம் சுவாமி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டுவரும் நிலையில், அவரைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான கருத்துகளை பா.ஜ.க. தலைர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, “காமராஜரின் படிப்பறிவின்மையை ஆர்கே 420 (ரஜினிகாந்த்)யோடு ஒப்பிட முடியாது. காமராஜர் அரசியல் தொண்டராக இருந்து முதலமைச்சராக உயர்ந்தவர். கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “ஆர்கே. 420யின் சினிமா வசனங்கள்கூட வேறொருவரால் எழுதப்படுமளவுக்கு கல்வியறிவற்றவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்தக் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். சிலர், ஆபாசமான சொற்களால் அவரை வசைபாடவும் செய்துள்ளனர். சிலர், ரஜினிகாந்த் மிக நேர்மையான மனிதர் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து, ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மீதுள்ள வழக்குகள் குறித்த நாளிதழ் இணைப்புகளை சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுவருகிறார்.
முன்னதாக, ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.