அமைச்சர் வெளியே வராவிட்டால் அடித்து நொருக்குவோம்.. : அரசுக்கு கடும் ஆபத்து எச்சரிக்கை!

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமானது தற்போது அரசு மீது பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை மாணவர்களின் போராட்டங்களின் பின்னணியில் அரசியல் இலாப நோக்கச் செயற்பாடுகள் உண்டு என அரசு தரப்பு அமைச்சர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆட்சிக்கு எதிரான மற்றுமொரு தரப்பு, மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தினை முன்வைத்து அரசின் செயற்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் முறைகேடாக நடந்து கொண்டமையினாலேயே தாக்கப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியில் சுகாதார அமைச்சுக்குள் மாணவர்கள் அத்து மீறி நுழைய முற்பட்டுள்ளமை தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சின் வாயிலை மாணவ கும்பல் அடித்து உடைத்து உள் நுழைய முற்பட்டுள்ளனர். அமைச்சரையும் தகாத வார்த்தைகளால் திட்டி இரும்புக் கம்பிகள் கொண்டு வாயிற் படலையை (கேட்) உடைக்க முற்பட்டுள்ளனர்.

இதன் போது “தீர்வு தராவிட்டால் அடித்து நொருக்குவோம்.. எங்கே ராஜித இப்போதே வரச்சொல்லுங்கள்… இல்லாவிட்டால் உடைப்போம்” என மாணவர்கள் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுப்பதும் பதிவாகி உள்ளது.

அதன் பின்னர் மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்ததன் பின்னரே பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனடிப்படையில் மாணவர்கள் மீதே தவறுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்வது அரசுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மேலும், இந்தப்பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் வைத்தியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதன் பின்னணியிலும் அரசியல் தூண்டுதல்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே நாட்டில் இனவாதப்பிரச்சினை சற்று அடக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் போராட்டங்கள் பாரிய அளவில் அரசுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.