இந்தி மொழி தான் இந்தியர்களின் அடையாளம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்தி திணிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது மற்ற மொழி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இந்தி தான் பிரதான மொழி என்ற பிம்பத்தை ஏற்படுத்துவற்கு மத்திய அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசு இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருவதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தி மொழி இந்தியர்களின் அடையாளம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசுகையில்., இந்தி நம் தேசிய மொழி. நமது தாய்மொழியை கற்றுக் கொள்வதுடன் அதனை மேம்படுத்தவும் வேண்டும். இந்தி மொழி இந்தியர்களின் அடையாளம். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும். இந்தி இல்லாமல் இந்தியாவில் முன்னேற முடியாது.
நாம் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது, நம்மை ஆங்கிலேய மக்கள் போல நினைத்துக் கொள்கிறோம். இது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல. இந்தி நமது தேசிய மொழி. அது இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை. வேலை வாய்ப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேண்டும் என எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது.
அதே நேரம் இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும் எனக் கூறினார்.
இதனிடையே அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் இனி ஆங்கிலத்துடன்இ இந்தி மொழியும் இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.