இந்தி திணிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது.. வைரமுத்து சுளீர்!

தமிழை தாய்மொழியாக கொண்ட யாரும் மத்திய அரசின் இந்தி திணிப்பை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளாaர்.

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் இந்தி அனைத்திலும் புகுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுத முயற்சி மேற்கொள்ளப்பட்டன. தற்போது பாஸ்போர்டுகளில் இந்தி மொழியை புகுத்தியுள்ளது மத்திய அரசு. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் இந்தி திணிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதை ஒருபோதும் ஏற்க முடியாது.
2017-ல் இந்தி மீண்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் திணிக்கப்படுகிறது. இதை தமிழை அறிந்தவர்கள் மட்டுமல்ல, தமிழை தாய்மொழியாகக் கொண்ட யாரும் பொறுத்துக்கொள்ள ஏற்றுக்கொள்ள இயலாது.

இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஆங்கிலம் என்பது தொடர்பு மொழியாக நீடிக்கிற வரைக்கும்தான் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்குமான உறவு தடையின்றி இயங்கும் என்று எங்களைப் போன்றவர்கள் நம்புகிறோம். இவ்வாறு வைரமுத்து கூறினார்.