பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் இன்று மீண்டும் சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் சசிகலாவை சந்திக்கவில்லை என்றும் இளவரசியை மட்டும் தான் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசலும், குழப்பமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஓரம்கட்டிவிட்டது அம்பலமாகியுள்ளது.
ஆட்சி மற்றும் கட்சியின் அதிகார மையம் யார் என்பதை வைத்தே மோதல் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடியை ஏன் முதல்வராக்கினோம் என சசிகலா தரப்பு யோசிக்கும் அளவுக்கு உள்ளது எடப்பாடியின் அதிரடிகள். எதிலும் சசிகலாவையோ தினகரனையோ கலக்காமல் முடிவுகளை அறிவித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இது சசிகலா மற்றும் தினகரன் தரப்புக்கு பெரும் அதிருப்தியை கொடுத்துள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று மீண்டும் சந்திப்பதாக தகவல் வெளியானது. கடந்த செவ்வாய்க்கிழமை தான் லோக்சபா துணை சபாநாயகரான தம்பிதுரையும், டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்தனர்.
இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்குள் தினகரன் சசிகலாவை சந்தித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்கவில்லைஇ இளவரசியை மட்டும்தான் சந்தித்தேன் என கூறியுள்ளார்.
மேலும் சசிகலா கூறியதால் தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.