போயஸ் கார்டன் அடிதடி.. தீபாவை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி தரையில் உருண்ட ஆதரவாளர்கள் கைது!

போயஸ் கார்டனில் தீபா மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில தினகங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெ.தீபா சென்றார். சகோதரர் தீபக் அழைத்ததால் போயஸ் இல்லம் சென்றதாக தீபா கூறினார். ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் வீட்டிற்கு நுழைந்து அங்கிருந்த புகைப்படங்களை அகற்றியதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டில் இருந்த பாதுகாவலர்கள் தீபாவை தடுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த தீபாவின் சகோதரர் தீபக் மற்றும் சிலருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது தீபா தாக்கப்பட்டார். பத்திரிகையாளர்களையும் போயஸ் இல்லத்தில் உள்ள குண்டர்கள் மோசமாக தாக்கினர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தீபா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னை தாக்கியவர்களை கைது செய்யும் படி கூறியுள்ளார். ஆனால் தீபா புகார் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பாக தீபா பேரவையின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுப்பிரமணி என்பவர் கடந்த 22-ந் தேதி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற போது மனுவை வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவின் ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் சுப்பிரமணி இன்று போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தார்.

அப்போது திடீரென கமி‌ஷனர் அலுவலக வாசலில் தரையில் உருண்டு சென்று மனு கொடுக்கப்போவதாக கூறி தரையில் படுத்து உருண்டார். அவரை தொடர்ந்து பெண்களும் தரையில் உருள சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். இதனால் கமி‌ஷனர் அலவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.