இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரஹாம் போர்டு அந்த பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். 56 வயதான கிரஹாம் போர்டு ஏற்கனவே 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இலங்கை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-வது முறையாக இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை அவர் பயிற்சியாளராக தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி பெரிய அளவில் சாதிக்கவில்லை. முதல் முறையாக வங்காளதேசத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவியது. அண்மையில் சாம்பியன்ஸ் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அதிருப்திக்குள்ளான இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. பரஸ்பரம் அடிப்படையில் பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.