வரலாற்றுச் சிறப்புமிக்க புதூர் நாகதம்பிரான் ஆலைய வருடாந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்கள்.
புதூர் நாகதம்பிரான் ஆலைய வருடாந்த பொங்கல் திருவிழா நாளை திங்கட்கிழமை காலை விசேட பூசை ஆராதனைகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து அடியவர்களின் நேர்த்திக் கடன் பூசை வழிபாடுகள் நடைபெற்று, இறுதியாக இரவு மடைப்பண்டம் எடுக்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வும் நடை பெறவுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோரின் நெறிப்படுத்படுத்தலில் துறை சார்ந்த பிரிவு பிரதிநிதிகளைக் கொண்ட விசேட பொங்கல் திருவிழா ஏற்பாட்டுக் குழு ஒழுங்குபடுத்தலில் திருவிழா நடை பெறவுள்ளது.
இதற்கமைய போக்குவரத்து சேவைகளை வழமை போன்று வடக்கு மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள அரச மற்றும் தனியார் துறையினரின் பயணிகள் பேருந்து சேவைகளை முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து நடாத்தப் பட்டவுள்ளதன.
பாதுகாப்பு சேவைகளை வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான சுமார் 2000, மேற்பட்ட சீருடை தரித்த மற்றும் சிவில் உடை அணிந்த ஆண்,பெண் பொலிசார் கடமையாற்றவுள்ளதுடன், இவர்களுக்கு உதவியாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் கீழ் உள்ள முன்னணி பாடசாலைகளின் சாரணிய மாணவர்களும் இணைந்து சேவையாற்றவுள்ளனர்.
அத்துடன்அதிகமாக பக்தர்கள் கூடும் இடங்களில் 25இற்கு மேற்பட்ட சீ. சீ. ரீ. கண்காணிப்பு கமறாக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடை பெறவுள்ளது.
இதேவேளைஇகுடிநீர் வசதி மற்றும் ஏனைய பராமரிப்பு பணிகளை வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலாளர் தலைமையிலான அணியினர் நெறிப்படுத்துகின்றனர்.
சுகாதார வைத்திய சேவைகளை வவுனியா வடக்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் நெறிப்படுத்துகின்றனர்.
எனவே பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை எவ்வித தடைகளும் இன்றி நிறைவேற்றிக் கொள்ளலாம் எனவும், பொங்கல் திருவிழாவிற்கு வருகை தரும் போது பக்த அடியார்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை முற்றாக தவிர்த்துக் கொள்வதுடன் சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டு நாகதம்பிரானின் இஷ்ட சித்திகளை பெற்று கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்கள்.